×

நோய் அச்சத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் பந்தல் அமைப்பாளர்கள்

சிவகங்கை, ஏப்.15: சிவகங்கை மாவட்டத்தில் தென்னை ஓலை, மூங்கில்கள் கொண்டு பந்தல் அமைப்பவர்கள் மற்றும் இப்பந்தல்களில் துணிகள் மூலம் டெக்கரேட் செய்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். மேலும் சாமியானா பந்தல் அமைப்பவர்களும் உள்ளனர். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கோவில் விசேஷங்கள் இம்மாவட்டத்தில் அதிகமாக நடத்தப்படும். இதை கணக்கிட்டு அதற்கேற்ப தென்னை ஓலைகள், மூங்கில்கள் வாங்கி அவைகளை பந்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் செய்து வைத்திருப்பர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகே படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தற்போது திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பந்தல் அமைப்பது மிகவும் முக்கியத்துவம் பெறும். ஒரு நிகழ்ச்சிக்கு குறைந்தது ரூ.5ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை பந்தல் அமைக்க செலவிடுவர். ஆனால் தற்போது திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்துள்ளதால் பந்தல் அமைக்கும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பந்தல் அமைப்போர் கூறியதாவது:திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே சார்ந்து எங்கள் தொழில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அந்த பாதிப்பில் இருந்து தற்போது தான் படிப்படியாக மீண்டும் வரும் வேளையில், மீண்டும் விழாக்களுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் மீண்டும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது திருவிழாக்கள் நடைபெறும் காலமாகும். பந்தல் தொழிலில் சிவகங்கை மாவட்டத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பிழைக்க வழியின்றி தவித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Bandal ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து...